தமிழகத்தில் பிப்..19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. முன்பே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதும், மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூடுதலாக சென்னையில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதாவது திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அவை சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட இருக்கின்றன. தற்போது குறைந்த அளவிலான மக்களே பேருந்துகளில் பயணிக்க அன்றைய நாள் முன்பதிவு செய்து இருப்பதாலும், வார கடைசி நாள் என்பதால் மக்களின் சிரமங்களைத் தவிர்க்கும் அடிப்படையில், குறைந்த அளவிலான சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.