தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நிறுவனங்கள், குடியிருப்புகளில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சி சார்பில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.