சென்னையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதில் எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோயம்பேடு மற்றும் பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தாமிரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஆஞ்சநேய நகர் 5வது தெருவில் ராஜாராம் என்பவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மிகப் பழமையான இவரது வீடு நேற்று இரவு 11.30 மணிக்கு இடிந்து விழுந்தது. அப்போது உறங்கிக்கொண்டிருந்த ராஜாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றி ராஜாராமின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உயிரிழந்த ராஜாராமன் குடும்பத்தினரை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் ராயபுரம் தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடுகிறது என்றால் பெரும் மழைக்கு இவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறினார். மேலும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.எனவே தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.