ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர்-புத்தினி தம்பதியினர் தங்களது 4 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்காக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை “லாக்டவுன்” இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கிஷோர் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, மோப்பநாய் உதவியுடன் மாயமான குழந்தையை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேலம் அரசு பேருந்தில் ஒரு ஆண் குழந்தை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அந்த குழந்தை காணாமல்போன “லாக்டவுன்” என்று தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில். விற்பனைக்காக யாரேனும் குழந்தையை கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.