தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை சென்னையில் மட்டும் 34 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் மூலம் 41,90,371 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 2000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்படும்.
இதில் ஒரு வார்டில் 10 முகாம்களில் 1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதனையடுத்து முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட இருக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.