சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதிக அளவில் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் மற்றும் சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் இணைப்பு சாலை சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி இணைப்புச் சாலை, மாடல் அட்மேன்ட் சாலை, தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை, தியாகராய சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக செல்லலாம். மேலும் சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் அண்ணாசாலை, செனடாப் சாலை சந்திப்பில் திரும்பி ஜி.கே மூப்பனார் மேம்பாலம் வழியாக கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை வழியாக செல்லலாம். மேலும் சேமியர்ஸ் சாலையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் டர்ன் புல்ஸ் சந்திப்பில் இருந்து செனடாப் சாலை சந்திப்பு,ஜி.கே. மூப்பனார் மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக திரும்பி விட வேண்டும். மேலும் தேவைப்பட்டால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.