சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கதவு 11 ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இதற்காக 37 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் மொத்தம் 20 கோடி செலவில் இந்த பாதையானது அமைக்கப்பட உள்ளது.
இதில் 37 மீட்டர் நிலத்துக்கான பணியை செய்வதற்கு மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து 6 கோடியே 60 லட்சம் ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து மீதம் இருக்கும் 170 மீட்டர் நீளத்திற்கான அணுகுசாலை பணிக்கு சென்னை மாநகராட்சியின் மூலதன மானிய நிதியில் 13 கோடியே 40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டு திட்ட பணியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகபாபு உள்ளிட்டோர் நேற்று தொடங்கி வைத்தார்கள்.
இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, “33 வருடங்கள் கழித்து சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றது. வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக இருக்கும் நிலையில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு 791 இடங்களில் பம்பு செட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருக்கின்றது. மேலும் மீதம் இருக்கும் பணிகள் சீக்கிரம் முடிக்கப்படும் என்றும் மூன்று மாதங்களில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.