சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையில் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வேளச்சேரியில் இருந்து கடற்கரை மார்க்கம் செல்லும் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து சேவையை தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள்.