சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று முதல் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இடைவிடாது பெய்த கனமழையால் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. வெள்ள நீர் சாக்கடை நீருடன் கலந்ததால் கருப்பு நிறத்துடன் ஓடிய இந்த நீரைக் கடப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நகரம் முழுவதும் ஓடிய நீரால் சாலைகள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்த செய்து வரும் பணியை அவர் பார்வையிட்டார். மேலும் அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி ,பட்டாளம், நியூ பேலஸ் ரோடு போன்ற பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியையும் பார்வையிட்டார்.