சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் முக்கியமான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் இடையே , பரங்கிமலை -எம்ஜிஆர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இந்தப்பாதையில் சுரங்கத்தில் 30 நிலையங்களும், தரைக்கு மேல் பாலத்தில் 20 ரயில் நிலையங்களும் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை மாதவரம் பால்பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அணிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி இணைக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் இன்று முதல் நாளை மாலை 4 மணி வரை அந்த பணிகள் நடைபெறும்.
அதன் காரணமாக மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம்,பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பட்டேல் நகர், பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாளை மாலை முதல் இந்தப் பகுதிகளுக்கு மீண்டும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.