தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் மழை நீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 14 சுரங்க பாதைகளில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் விழுந்த 116 மரங்களும் முழுவதும் அகற்றப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 7,180 புகார்களில் இதுவரை 3,593 புகார் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முற்றிலுமாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.