சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் எனும் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமான நபரிடம் 3 கோடி வரை பணம் வசூலித்த கும்பல் மோசடி செய்துவிட்டது எனவும் வேலைக்காக போலி பணி நியமன ஆணைகளை அந்த கும்பல் வழங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் நானும் அந்த கும்பலிடம் பணத்தை இழந்தேன் அந்த மோசடி கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தார்.
இந்தப் புகாரை உடனடி நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலாராணி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் சென்னை நன்மங்கலம் சேர்ந்த ரேணுகா என்ற பெண் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மேலும் சைதாப்பேட்டையை சேர்ந்த காந்தி (54) தேனியை சேர்ந்த ராஜேந்திரன் (32) ஆகிய இருவரும் இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் சுமார் 100 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் தங்களிடம் ஏமாந்த இளைஞர்களிடம் அசல் கல்வி சான்றிதழ்களை பெற்றதும், இளைஞர்களை நம்ப வைக்க சில இளைஞர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இந்த மோசடி கும்பலிடம் இருந்து போலியான பணி நியமன ஆணை நகல்கள் இளைஞர்களிடம் வாங்கிய அசல் கல்வி சான்றிதழ் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். இப்பணத்தில் வாங்கிய 40 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், செங்கல் சூளையில் 23 லட்சம் முதலீடு செய்த ஆவணங்கள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கைதான ரேணுகா கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பிளஸ் டூ வரை படித்துள்ளார் .
இந்த மிகப்பெரிய மோசடி லீலைகளை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மோகன்ராஜ். இவர்தான் போலியான அடையாள அட்டை மற்றும் போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளார். மேலும் போலியான ரேணுகா பல்வேறு அரசு அலுவலகங்களில் நேரடியாக சென்று அதிகாரி என்ற தோரணையில் வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.