தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பாஜக உறுப்பினர் வானதிசீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி இருக்கிறது. சட்டவிதிகளை முறையாக கடைபிடிக்காமல் இதை செய்துள்ளது” என்று கூறினார். இதையடுத்து பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இப்பிரச்சினை நீதிமன்றத்திலே உள்ளது. இன்று அவற்றிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
எனினும் நம்முடைய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்லவேண்டுமோ அதை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார். இருப்பினும் பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அது என்னவெனில் ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் ஆகும். சாமானிய மக்கள் பாதிக்கிற அடிப்படையில் இன்றைக்கு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
அதுமட்டுமின்றி நம்முடைய மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளிடத்திலே குறிப்பாக பிரதமரிடத்திலே நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே அதற்கு உறுதுணையாக இருந்து அதனைப் பெறுவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். நமது மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். எனவே தேவை இல்லாமல் இதிலே அரசியலைப் புகுத்தி அதன் வாயிலாக நீங்கள் உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களேயானால் அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பேசினார்.