சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 1500 மாணவர்கள் உணவு தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு திடலில் மூன்று நாள் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டது. உணவு வீணாவதை தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த உணவு வகை உணவுகளை சாப்பிட்டால் நல்லது என்பது பற்றிய பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது.
பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் உணவுத் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக சத்தான உணவுகளை தாமாகவே தயாரிக்கும் விதமாக அடுப்பில்லா சமையல் என்று பெயரில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்துமாவு உருண்டை, சிறுதானிய உருண்டை, ஃப்ரூட் சாலட், மசாலா பயிறு உள்ளிட்ட பத்து வகையான தின்பண்டங்களை மாணவர்கள் தயார் செய்தனர். 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.