சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவு திடலில், சிங்காரச் சென்னையில் உணவு திருவிழா என்று மூன்று நாள் கண்காட்சியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். நாளை வரை இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது. மூன்று நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய வகைகள், 65 வகையான தோசை வகைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், சிறப்பு வாய்ந்த இருட்டு கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையான நிலையில் பீஷ் பிரியாணி அரங்குகள் அமைக்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்த காரணத்தினால் இன்று நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் மூன்று பீப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என்று சர்ச்சை எழுந்த நிலையில் இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழா இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளனர்.