சென்னை ஐஐடியில் உலகளாவிய திட்டமாக உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘ப்ரெயின் இமேஜிங்’கில் இந்த கவனத்தை செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் ‘சுதா கோபாலகிருஷ்ணன் பிரேன் சென்டர்’ தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், மனிதமூளை தரவுகள், அறிவியல் வெளியீடு மற்றும் தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக மாற்றுவது ஆகும்.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன், சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், திருமதி. சுதா கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் ஆகியோரது முன்னிலையில், இந்த மையம் மார்ச் 19 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நரம்பியலும் பொறியியலும் இணையும் இடத்தை மையப் புள்ளியாகக் கொண்டு, சென்னை ஐஐடி-யில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இந்த மையம் மூளையை வரைபடமாக்கும் ஆராய்ச்சித் துறையில் முதன்மை பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் பேராசிரியர் கே.விஜய் ராகவன் பேசுகையில், “அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற சென்னை ஐஐடி-யும், மருத்துவத் துறையும் இணைந்து செயல்படுவது புரட்சிகரமானது என்று கூறியுள்ளார். மனித மூளையின் செயல்பாட்டில் அசாதாரணப் பிரச்சனை ஒன்று இருந்து வருகிறது. மனித மூளையின் செயல்பாடு குறித்த புரிதலில் நாம் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம். ஆகவே இதில் இருக்கக் கூடிய சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை ஐஐடி-யின் ‘ப்ரெயின் சென்டர்’ உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னாள் மாணவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “தொழில் முனைவோரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிப்பதில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், உலகத்தரம் மிக்க ஆராய்ச்சியின் மூலம் மேலும் ஊக்குவிக்க வேண்டிய நிலை தேவை உள்ளது. நாட்டின் அறிவுப் பொருளாதாரத்தை வழங்குவதில் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றார்.
இக்கண்டுபிடிப்பின் மூலம் உலகத்துக்கு அதிக பயனுள்ளதாக அமையும். இதனைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகையான மற்றும் வெவ்வேறு வயதுடைய மனித மூளைகளை உடற்கூறு ஆய்வாக எடுத்து இந்த மையமானது இமேஜிங் செய்து வருகிறது. மேலும் மூன்று வளரும் மூளைகளின் தொடர் பிரிவு செல்-ரெசல்யூஷன் தொகுதிகள் ஏற்கனவே இந்த மையத்தில் உள்ளது. எனவே வளரும் மூளைகளின் பிரத்தியேக முதல்தர தரப்புக்கள், பின்னர் வெளியிடப்படுவதாக சென்னை ஐஐடி தரப்பில் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி டீன் மற்றும் மையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் லிசி பிலி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
.