மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு சட்டமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் அரசு நிறுவனப் பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலைசிறந்ததாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐ எம்) ஆகியவற்றில் மட்டும் இட ஒதுக்கீட்டை விதிகள் கடைபிடிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீட்டை மீறி உயர் சாதியினருக்கு மட்டுமே இந்த நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பல பணிகள் வழங்கப்பட்டு வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சென்னை ஐஐடியில் எந்த சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இளைய தலைமுறை என்ற அமைப்பு விண்ணப்பித்தது. அதற்கு கிடைத்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை ஐஐடியில் மொத்தம் 619 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதில் 514 பேர் உயர்ஜாதியினராக இருந்து வருகின்றனர். அதாவது சென்னை ஐஐடியில் 83 சதவீதம் விழுக்காடு உயர் ஜாதியை சேர்ந்தவர்களாக மட்டுமே பணியாற்றுகின்றனர். அதில் BC, MBC- 70 பேர் (11.30%), SC-27 பேர் (4.30%), ST- 8 பேர் (1.30%) பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அதிக அளவில் பயன்பெறும் முன்னேறிய சாதியினருக்கு தான் EWS பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.