சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளை படம்பிடித்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார்.
ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தி விட்டு சென்ற போது இதை கவனித்துள்ளார். அங்கு தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே வட்ட வடிவில் துளையும், அதில் கரும்புள்ளி ஒன்று தெரிவதையும் பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது துளைக்குள் செல்போன் ஒன்றும் அதன் கேமரா கண்கள் கழிவறையைப் பார்ப்பதுபோல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார்.
அந்த மாணவியின் சத்தம் கேட்டு வந்த நபர்கள் அருகில் இருந்த அதே துறையை சார்ந்த உதவி பேராசிரியராக சுபம் பானர்ஜியை பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்கள் கழிவறையில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள ஓட்டை வழியாக செல்போன் வைத்து வீடியோ எடுப்பது சுபம் பானர்ஜி வாடிக்கையாக வைத்து வந்தது தெரியவந்தது.
பல பெண்களை வீடியோ எடுத்ததை உதவி பேராசிரியர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.