சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமையை குறித்து புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் தான் படிக்கும் காலத்தில் பாலியல் ரீதியாக பலரால் துன்பம் பட்டதாகவும், ஒரு சமயத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் கோட்டூர் காவல்துறையினர் மானபங்கம், பாலியல் துன்புறுத்தல் உட்பட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதைப்போல மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் வாங்கினார்கள். அதில் ஐ.ஐ.டி பேராசிரியர் இரண்டு பேர் உட்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டது. அந்த 8 பேரில் இரண்டு பேர் வெளிநாடு சென்றதாகவும், மீதி ஆறு பேருக்கு சம்மன் அனுப்பி கோட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவி அளித்த வாக்குமூலத்தில் முக்கிய முதல் குற்றவாளியான மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்டத்தை சேர்ந்த கிங்ஷீக்தேவ் சர்மாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அவர் முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கற்பழிப்பு சட்டப்பிரிவு, தீண்டாமை ஒழிப்பு சட்ட பிரிவு ஆகியவை இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டது.
அதன்பின் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தபட்டது. இதை அடுத்து இந்த வழக்கு உயரதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் மாற்றப்பட்டு, தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளியாக இருக்கின்ற கிங்ஷீக்தேவ் சர்மாவை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்தார்கள்.
அப்போது தனிப்படை காவல்துறையினர் மேற்கு வங்காள மாநிலம் சென்று குற்றவாளி கிங்ஷீக்தேவ் சர்மாவை கடந்த 28-ஆம் தேதி கைது செய்தார்கள். அதன் பின்னர் அவரை மேற்கு வங்க மாநிலம் டைமண்டு ஹார்பர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடிவாரண்டு பெற்று சென்னை அழைத்துவர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றதால் கோர்ட் அவரை ஜாமீனில் விட்டு விட்டு பிடிவாரண்டு கொடுக்க மறுத்து விட்டது.
இதனால் தனிப்படை காவல்துறையினர் வெறுங்கையோடு சென்னை திரும்பி வந்தனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை குறித்து சட்டநிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேரிடம் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார்.
அவர்களிடம் ஏற்கனவே ஒருமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தபோது நேற்று முன்தினம் மாலை அவர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். இந்த விசாரணையில் சிக்கிய பேராசிரியர் தற்போது பணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.