விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர்.
சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் கடற்கரை முழுவதும் குழந்தையைத் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் தாய் சினேகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடற்கரையைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்ததில் ஒரு பெண் அந்த குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் சென்ற திசையில் இருக்கும் அனைத்து கேமராக்களையும் போலீசார் சோதனை செய்தனர். இந்நிலையில் காணமல் போன குழந்தை சென்னை கே.கே. நகரில் பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர் குழந்தை கடத்தல் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.