Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் தாயுடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்… போலீசார் தீவிர விசாரணை!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் தூங்கிய 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர்.

சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். இன்று காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் கடற்கரை முழுவதும் குழந்தையைத் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் தாய் சினேகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடற்கரையைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்ததில் ஒரு பெண் அந்த குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் சென்ற திசையில் இருக்கும் அனைத்து கேமராக்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பலூன் விற்பனை செய்யும் தம்பதியின் கைக்குழந்தையை ஒரு பெண் தூக்கிச் சென்றார். அந்த பெண் சென்ற வழியிலிருந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்து குழந்தையை கைப்பற்றினர். இதே போலச் சம்பவம் மீண்டும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்துள்ளது. தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் குழந்தைகள் திருடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |