சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில் தமிழ் படங்கள் 12 அடங்கும். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவின் இறுதி நாளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி மாமனிதன் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், கிடா படத்திற்காக நடிகர் பூ ராமுவுக்கும் சிறந்த நடிகர்கள் விருது வழங்கப்பட்டது.
அதன்பிறகு கார்கி படத்திற்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆதார் படத்திற்காக சிறப்பு சான்றிதழ் விருது நடிகர் கருணாசஸ்-க்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்திற்கான முதல் பரிசு கிடாவுக்கும், சிறந்த படத்திற்கான 2-ம் பரிசு சிம்பு தேவன் இயக்கிய கசடதபற படத்துக்கும் வழங்கப்பட்டது. இரவின் நிழல் படத்துக்காக சிறப்பு நடுவர் விருது இயக்குனர் பார்த்திபனுக்கும், இரவு நிழல் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆர்தர் வில்சனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் வழங்கப்பட்டது.
பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவாளர் விருது பி.ஜே ரூபனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பட தொகுப்பாளர் விருது பிகினிங் படத்தில் பணியாற்றிய சி.எஸ் பிரேமுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர் பாரதி ராஜாவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவ்விருது கூடிய விரைவில் வழங்கப்படும் என்று ஐசிஏஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.