சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு வழித்தடத்திலும் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் அழுத்த மின்சார கேபிள் அறுந்ததால், சென்னை கடற்கரை செல்லும் வழித்தடத்திலும், தாம்பரம் செல்லும் வழித்தடத்திலும் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.