தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி, சென்னை சென்ட்ரல்-சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை -வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.