சென்னை புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஐஐடி நிபுணர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர் நிபுணர்குழுவின் முழுமையான அறிக்கையை நாளை மறுநாள் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆளும் போது கட்டப்பட்ட 7500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதே இடத்தில் குடியிருப்புகளை இடித்து மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் குடியிருக்கும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நீர்நிலைப் பகுதிகளில் 54 ஆயிரம் இடங்களில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் முதற்கட்டமாக 6000 பேருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் சேலத்தில் 85ரூபாய் கோடி செலவில் ஜவ்வரிசி கிடங்கு முதல்வரால் நாளை மறுநாள் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்தார்