Categories
தேசிய செய்திகள்

சென்னை போலீசுக்கு எதிராக போராட்டம்….. டெல்லி போலீஸ் தடியடி ….!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, இன்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின்முன், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்களின் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

சனக்புரி பகுதியிலுள்ள பழைய தமிழ்நாடு இல்லமான வைகை இல்லத்தின் முன் திரண்ட மாணவர்கள், தமிழ்நாடு அரசிற்கு எதிராகவும், காவல் துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து முன்னதாகவே தகவல் தெரிந்து பழைய மற்றும் புதிய தமிழ்நாடு இல்லங்களின் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர், சிஆர்பிஎப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

”இது மகாத்மா காந்தி பிறந்த மண். குடியுரிமை திருத்தச் சட்டத்தை இங்கே நாம் அனுமதிக்கக் கூடாது. சென்னையில் இச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தடைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும், காவல் துறையினரின் மீதான தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |