கனமழை காரணமாக வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.
மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சில்லரை விற்பனையில் 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதி கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் 1 கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், பீன்ஸ் இன்று 100 முதல் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. 22 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு 60 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கு விற்பனையான கோவக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.