இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் வருகின்ற 13, 14, மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கடந்த 27ஆம் தேதி துரை சார்ந்த அலுவலர் குல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தங்களது பகுதிகளில் தேவையான அளவு தேசியக்கொடி இறுப்பு உள்ளதை வியாபாரிகள் மற்றும் சுய உதவி குழுவினர் உறுதி செய்யவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 75 வது சுதந்திரத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து வீடுகளிலும் வருகின்ற 13, 14, மற்றும் 15 தேதிகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றுவது குறித்து மண்டல குழு தலைவர், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள், அனைத்து வார்டு மாமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் முடிந்த அளவிற்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்பாடு செய்து தரவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மேயர் பிரியா கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் தேசியக்கொடியை தயார் நிலையில் வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஒவ்வொரு தேசியக் கொடியும் 3:2 என்ற விகிதத்தில் இருக்குமாறு தயார் செய்யவும் அறிவுறுத்தினார். அதேபோல தேசியக்கொடியை தயார் செய்யும் போது அல்லது விற்பனை செய்யும் பொழுது பிளாஸ்டிக் கொடிகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.