சென்னையில் உள்ள தி.நகரில் ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை மேம்பாலத்தில் நடந்து வர முடியும். இந்த மேம்பாலம் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனை முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் அழகிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.4 மீட்டர் அகலத்தில் 600 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ரூ.23 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த தி நகர் ஸ்கைவாக் மேம்பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இதனை 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டது.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை, பல்வேறு வடிவமைகளை பரிந்துரைத்தல் போன்ற காரணங்களால் பணிகள் தாமதமாகியது. இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு பிறகு இந்த மேம்பாலத்தின் பணிகள் வேகமடுத்துள்ளது. இன்னும் ஒரே மாதத்தில் வேலைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை சமீபத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தற்பொழுது 90% பணிகள் நிறைவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.நகர் பேருந்து நிலைய அருகில் பாலம் முடிவடையும் இடத்தில் லிப்ட் மற்றும் ரயில் நிலையம் அருகே எஸ்கேலேட்டர் வசதிகள் செய்து தரப்படும் தெரிவித்தார்.