வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புகள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையில் அத்தனை தெருக்கள், சாலைகளிலும் மழை நீர் வடிகால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. சில இடங்களில் மிக விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் இன்னும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பல இடங்களில் இப்போதுதான் குழியை வெட்டி பணியை தொடங்குகின்றனர். சென்னையில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் அதில் தண்ணீர் தேங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். முன்னாள் மேயர் சிவராஜின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கச் சாலையில் உள்ள அவரது சிலை திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி மேயர் பிரியா, மழை நீர் வடிகால் பொருத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்காரச் சென்னை பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதி 95% பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பகுதியில் 35% பணிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம்ம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தோ, அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5% பணிகள் மட்டுமே உள்ளது. அதுவும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நிறைவடைந்து விடும். வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.