சென்னையில் மழை நீர் வடிகால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முதல்வரின் உத்தரவின் பெயரில் சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கிலோமீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதன்படி அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கியின் நிதி உதவியுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கவும், பணி நடைபெறும் இடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றி பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளப்பட்ட அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்காததால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தாமதமாகி வருகின்றது. இந்த பணிகளை மேற்கொண்டு வரும் எட்டு ஒப்பந்ததாரர்களுக்கு தலா 25,000 இடம் 2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை நீர் வடிகால் அமைக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்திற்காக இரண்டு நிறுவனங்களுக்கு காரணம் கேட்டு அறிவிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.