சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மேயராக கடந்த 4-ஆம் தேதி பிரியா ராஜன் பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். இவர் சென்னை திரு.வி.க நகர் மாணவ-மாணவிகளுக்கு 170 கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குடற்புழுநீக்க மாத்திரைகள், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் என பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார். இவர் மக்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என அறிவித்துள்ளார். இந்த கருத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை ஆணையர் சிவகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் தாலிக்கு தங்கம் என்ற திட்டம் ரத்து செய்யப்படவில்லை எனவும், மாநகராட்சி கவுன்சிலர்களின் பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க அரசின் பட்ஜெட்டை காற்று போன பலூன் என்று கூறிய அ.தி.மு.க அரசுதான் இன்று காற்றுப்போன பலூன் போல் இருக்கிறது என்று கூறினார்.
இதன்பிறகு சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சிக்கும் இம்மாத இறுதிக்குள் வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது 3,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இம்மாத இறுதிக்குள் பட்ஜட் தாக்கல் செய்யப்படும் எனவும், அதில் மழைநீர் வடிகாலுக்கு நிதி ஒதுக்கப்படும். இதனையடுத்து மார்ச் 30-ஆம் தேதி மண்டல குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.