சென்னை விமான நிலையத்தில் முக்கியத்துவம் இல்லாத இடங்களில் தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னையில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த முக்கியமான இடங்களில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் முக்கியம் இல்லாத மற்ற இடங்களில் தனியார் பாதுகாப்பு படையினரும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் முதல் கட்டமாக பாதுகாப்பு பணிக்கு 50 தனியார் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பணிநியமன சான்றுகளையும் விமான நிலைய இயக்குனர் வழங்கினார். பணி நியமனச் சான்றுகளை பெற்றவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இரண்டு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.