சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் பயண அனுபவத்தினை விமான நிலைய அதிகாரிகள் பெற்று வருகின்றனர். இதன் மூலமாக கொரோனா கால கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க விமான நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை கவுரவிக்கும் அடைப்படையில் சர்வதேச விமான கவுன்சில் “தி வாய்ஸ் ஆப் கஸ்டமர்” எனும் அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. இது குறித்து கவுன்சில் அனுப்பிய கடிதத்தில், “சர்வதேச விமான கவுன்சிலின் விமான நிலைய சேவை தரம் திட்டத்தின் கீழ் பயணியரிடம் இருந்து கருத்துக்களை பெறும் முக்கியமான பணியை சென்னை விமான நிலையம் மேற்கொண்டது.
இது பயணிகளுக்கு வழங்கும் சேவையின் தரத்தை அறிய உதவும். உலக அளவில் பயணிகளின் பயண அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காகவும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் சிறந்த சேவை வழங்குவதை சர்வதேச கவுன்சில் உறுதி செய்துள்ளது. இந்த அங்கீகாரமானது மேலும் ஊக்கம் அளிக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பயணிகளுக்கு நன்றி என சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தெரிவித்தார்.