உரிய நேரத்துக்கு விமானங்கள் புறப்படும் நேரத்தை உறுதிசெய்வதில் சென்னை விமான நிலையத்துக்கு சர்வதேச அளவிலேயே 8-வது இடம் கிடைத்து இருக்கிறது.
விமானத்துறை, விமானங்கள், விமான நிலையங்கள் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சிரியம்” என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2021ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் குறித்த நேர செயல்பாடு பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் வருடம் பெரியசர்வதேச விமான நிலையங்களிலிருந்து குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில் சென்னை விமான நிலையம் 89.32 சதவீதத்துடன் 8-வது இடம் பிடித்துள்ளது. மொத்தமாக 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி இருக்கின்றன.
இதில் 70 வழித்தடங்களில் 81.90 % விமானங்கள் கண்காணிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்பின் 28 கோடி இருக்கைகள் எனும் அடிப்படையில் பெரிய விமானம் நிலையமாக கருத்தில் கொண்டு உள்ளது. இந்தியாவில் சென்னை சர்வதேச விமானம் நிலையம் மட்டுமே உரிய நேரத்தில் விமானங்கள் புறப்பாட்டை உறுதி செய்வதில் சர்வதேச அளவில் இடம் பிடித்தது. இதற்கான சான்றிதழை சிரியம் நிறுவனத்தின் தென்ஆசியா கண்டத்தின் வர்த்தக தலைவர் சைலேஷ், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமாரிடம் நேற்று முன்தினம் வழங்கினார். அப்போது விமான நிலையத்தின் பொதுமேலாளர் ராஜூ, இணை பொதுமேலாளர் ராஜ்குமார், விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உதயகுமார் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.