தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு நீண்ட விடுமுறை வருகிறது என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிதும் குறைந்து தளர்வுகள் காரணமாக விமானத்தில் பயணம் செய்ய தடை இல்லை. இதனால் விமானம் முலம் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடியில் போன்ற நகரங்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்வதால் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
அதில் திருச்சிக்கு ஒருவழிப் பாதையில் செல்வதற்கு ரூ.9,500, மதுரைக்கு ரூ.10,000 மற்றும் தூத்துக்குடிக்கு ரூ.9200 முதல் ரூ.11,000 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் ஒரு மணி நேரம் தான் பயணம் ஆனாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானம் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மதுரைக்கு விமானம் பயணம் மேற்கொள்ள ரூ.14,000 வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் வட மாநில மும்பை மற்றும் டெல்லி நகரங்களுக்குச் செல்வதற்குக் கூட டிக்கெட் விலை ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே உள்ளது. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்வதற்கு விமான பயண டிக்கெட் விலை ரூ.10,000 தாண்டவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் தீபாவளி வசூல் என்ற பெயரில் விமான பயண டிக்கெட் விலை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறியது, “வரும் நாட்களில் விமான டிக்கட்டின் விலை அதிகரித்து ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை உயரும். இது போன்ற நிலை கொரோனா காலகட்டத்திற்கு முன் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பழைய நிலை திரும்பியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் விமானம் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் சங்கத்தினர் மற்றும் டிராவல் ஏஜெண்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.