செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகள் சில விதிமுறைகளுடன் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…
கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக தமிழகத்தில் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அச்சிரமத்தை போக்குவதற்காக தமிழக அரசு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 8 மண்டலங்களாக தமிழகம் பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.மண்டலங்களை விட்டு வெளியே செல்ல நினைப்பவர்கள் இ பாஸ் கொண்டு பயணிப்பது அவசியமாகிறது.
முதல் மண்டலமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன. இரண்டாம் மண்டலமாக தர்மபுரி,வேலூர் திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம்,திருவண்ணாமலை,கடலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மூன்றாம் மண்டலத்தில் உள்ளன. நான்காம் மண்டலமாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சை,நாகை,திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் உள்ளன. ஐந்தாம் மண்டலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை போன்ற மாவட்டங்கள் ஆறாம் மண்டலத்தில் உள்ளன.
ஏழாம் மண்டலத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன. எட்டாம் மண்டலத்தில் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 50 சதவீத பேருந்துகள் முதல் ஆறு மண்டலங்களில் செப்டம்பர் 1 முதல் இயக்கப்படும் என்றும், 7 மற்றும் 8வது மண்டலங்கள் இதில் தவிர்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டமானது முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டது இருப்பினும் கொரோனா பரவல் அதிகமானதால் இம்முறையானது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.