மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்..
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டதாவது, பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும். சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் ‘திரையில் பாரதி’ என்ற தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும். பாரதியாரின் பாடல்களுடன் திரையில் பாரதி என்ற நிகழ்வு நேரு விளையாட்டு அரங்கில் நடத்தப்படும். உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்து ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்படும்..
பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும். செப்டம்பர் 11 இல் மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது தரப்படும்.. மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் பாரதி இளங்கவிஞர் விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். பாரதியின் பாடல்கள் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும். பாரதி பற்றி ஆய்வு செய்த எழுத்தாளர்கள், குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, விருது, பாராட்டு சான்றிதழ் அரசால் வழங்கப்படும்.
பள்ளி கல்லூரி பேருந்து நிலையங்களில் எழுதியும் வரைந்தும் பாரதியாரின் வரிகள் பரப்பப்படும். உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி உதவி தரப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதார பூங்காவிற்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்டப்படும்.
பாரதியின் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியை போற்றுவோம் என்று கூறியுள்ளார்..