செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளை மகாகவி நாளாக இனி கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன் என்பவர் தனது புலமை திறமை காரணமாக பாரதி என்று அழைக்கப்பட்டார். இவர் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். விடுதலைக்காக பல புரட்சிக்கவிதைகளை எழுதியுள்ளார். தனது 39 வயது வரை வாழ்ந்த பாரதி செப்டம்பர் 11, 1921 ஆம் தேதி அன்று காலமானார்.
அன்று முதல் மகாகவி பாரதியார் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும். இந்த விருது பெரும் மாணவர்களுக்கு தல ஒரு லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளை செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாள் என்று கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் அமைச்சர்கள். மகாகவியின் நினைவு நாளான நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.