புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சி பூஜைக்கு பிறகு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். நாள் தோறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினந்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்ட சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
வருகின்ற 17 ம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதையடுத்து 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெற்ற பிறகு 21 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.