அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். காவல் உதவி ஆய்வாளர் என்பது அவர்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.