தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் மருத்துவர் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறவுள்ளதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கல்லூரிகளுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வு நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி கூறியது, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். ஆனால் தொற்று அதிகரித்து வந்தால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி கல்லூரிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.