சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்தது.
இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என 26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பார். சூர்யாவின் இந்த ஆட்டத்தை கோலியே ரசித்து பார்த்தார்.
இதையடுத்து போட்டி முடிந்த பின் பெவிலியனை நோக்கி சூர்யகுமார் சென்றபோது, விராட் கோலி தனது நெஞ்சில் கையை வைத்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கி கை கொடுத்து மரியாதை செய்தார். உலகின் தலைசிறந்த வீரரான கோலி வளர்ந்து வரும் சூர்யகுமாருக்கு மரியாதை கொடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி பாராட்டுக்களை பெற்றது.
இந்த ஆட்டம் குறித்து விராட் கோலி பேசியதாவது, சூர்யகுமார் பேட்டிங் அற்புதமாக இருந்தது.. மறுமுனையில் நின்று அவரது ஆட்டத்தை பார்த்து மிகவும் ரசித்தேன்.. ஐபிஎல் போட்டிகளில் நிறைய முறை எங்களது அணிக்கு எதிராகவும், மற்ற அணிக்கு எதிராகவும் சூர்யா குமார் யாதவ் இப்படி விளையாடியதை நான் பார்த்திருக்கின்றேன்.
ஆனால் தற்போது அவர் அருகில் நின்று அவரது ஆட்டத்தை பார்த்து ரசிப்பது இதுவே முதல்முறை.. இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது.. அவருடைய ஆட்டத்தை பார்த்து திகைத்து போய்விட்டேன்.. சூரிய குமாரால் உலகின் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் தனது அதிரடி ஆட்டத்தை ஆட முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.