சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல கல்வி குழுக்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சீருடை பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுக்கான இலவச பயிற்சியும் பேராசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அதன் மூலம் 948 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். தமிழ் வழி கல்வி பயின்றோருக்கான ஊக்கத்தொகை ராணி மேரி கல்லூரியில் 842 பேர் பெற்று வருகிறார்கள். ராணி மேரி கல்லூரி மாணவிகள் விளையாட்டு துறையிலும் சளைத்தவர்கள் அல்ல, கல்லூரியின் சார்பாக கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஏசியன் ஜூடோ போட்டிகள் இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற போது, இந்த கல்லூரியினுடைய மாணவியர் பங்குபெற்று பதக்கம் வென்று இருக்கிறார்கள்.
இந்திய பார்வையற்ற பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் சங்கம் சார்பில் சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிலம்பத்திலும், கோ கோவிலும் தேசிய அளவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்கள். மால்கம் போட்டி, கராத்தே மற்றும் கபடியில் தேசிய அளவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்கள். மாநிலங்களுக்கு இடையே ஆன ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ளார்கள். மாணவி நித்யா குறளோவியம் நாட்காட்டி ஓவிய போட்டியில் வென்று தனது ஓவியத்தை அரசு நாட்காட்டியில் ஏற்றி இருக்கிறார். பரதநாட்டிய நடனத்தில் சாதனை படைத்து வருகிறார் என பெருமை கொண்டார்.