புதுச்சேரியில் வறுகோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடும்ப அட்டை மூலம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வந்தது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதால் இலவசமாக வழங்கப்படும் துணிகளுக்கு பதில் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை மற்றும் பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,27,789 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்.அதேபோல், இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வீதம் நேரடி பணப் பரிமாற்றத்தின்(DBT) மூலம் 13.01.2022 அன்று குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக மொத்தம் ரூ.12.13 கோடி செலவிடப்பட்டது” என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.