விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக சட்டப்பேரவையில் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியர்களுக்கு உணவு மற்றும் உறைவிட கட்டணத்தை எவ்வித பாகுபாடுமின்றி வழங்கும் பொருட்டு, கல்வி உதவித் தொகை திட்டத்திங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் உறைவிட கட்டணமாக, பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 175 ரூபாய், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 350 ரூபாய், ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 225 ரூபாய் என்று வழங்கப்படுவதை அனைவருக்கும் 400 ரூபாயாக உயர்த்தி 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை செயல்படுத்தும் விதமாக பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், உணவு, உறைவிட கட்டணமாக ரூ.400 வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 95 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.