செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் 15 கடைகளில் சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு சான்று, உரிமம் பெற்று கடையை நடத்த வேண்டும். ஷவர்மா தயாரிப்பு சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் செயற்கை முறையில் வண்ணங்கள் சேர்க்கக்கூடாது. இதனையடுத்து ஷவர்மாவை நன்றாக வேகவைத்து அதன்பின் விற்கவேண்டும். திறந்தவெளியில் வைத்து ஷர்மாவை தயார் செய்யக்கூடாது. அன்றாடம் எவ்வளவு தேவையோ அதற்கேற்ப இறைச்சியை கொள்முதல் செய்யவேண்டும். கொள்முதல் செய்த அனைத்தையும் அன்றைய தினமே முழுவதுமாக பயன்படுத்திட வேண்டும்.
இதனை அடுத்து ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும் உடைந்து போன முட்டைகளை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். மேலும் இந்த ஆய்வின் போது செயற்கை வண்ணம் பயன்படுத்தப்பட்ட சுமார் 12 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்துள்ளனர். இதனையடுத்து பிளாஸ்டிக் பைகள், உடைந்த முட்டைகள் பயன்படுத்திய கடைகளுக்கு சென்று ரூபாய் 10,000 அபராதம் விதித்தனர்.