கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராம் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயராம் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஜெயராமனின் வீட்டிற்கு விரைந்து சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.