உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முடக்கும் வரை நான் அனைத்து சட்ட முயற்சிகளையும் செய்வேன் என்று நாராயணன் தெரிவித்துள்ளார்.
மராட்டிய போலீசாரால் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த மத்திய மந்திரி நாராயணன் ரானே மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசிய அத்தனையும் சரி என்றபடியே கூறினார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது கூட தெரியாத ஒருவரின் மீது தான் நான் கோபப்பட்டேன். நான் பேசியது எப்படி குற்றமாகும்?
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் உத்தவ் தாக்கரே பேசினார். இதெல்லாம் சரி என்றால் நான் பேசியதும் சரிதான்” என்று தெரிவித்தார். நான் யாருக்கும் பயந்து போய் மூலையில் உட்கார்ந்து விட மாட்டேன். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை முடக்கும் வரை அனைத்து சட்டரீதியான முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.