மும்பையில் ஆற்றங்கரை ஓரம் நின்று மொபைலில் செல்பி எடுத்த சகோதரிகள் 2 பேர் தவறி விழுந்து இறந்தனர்.
மும்பை அருகிலுள்ள வைத்தர்ணா ஆற்றுக்கு சகோதரிகள் நீலா(24), சந்து(15) உட்பட 4 பேர் மாலை நேரத்தில் பிக்னிக் சென்றனர். இதையடுத்து சகோதரிகள் கரையோரம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதனிடையில் சகோதரிகள் விழுந்த இடத்தில் அதிகமாக சகதி இருந்ததனால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை.
அதன்பின் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகோதரிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முதலில் சகதியில் சிக்கி இறந்த சந்துவின் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகே இறந்த நிலையில் நீலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இரண்டு பேரின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கரையோரப்பகுதியில் அதிகளவில் சகதி இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் மக்கள் அங்கு செல்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.